சென்னை: புகார் கொடுக்க வந்தவரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்,ஐக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வராஜன். இவர், கட்டுமான பணிக்காக திருவான்மியூரை சேர்ந்த அழகேசன் என்பவரிடம் இருந்து மணல் வாங்கியுள்ளார். இதற்கான தொகையை வழங்குவதில், இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக செல்வராஜன், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரை விசாரித்த அப்போதைய வேளச்சேரி எஸ்.ஐ கலைச்செல்வி, செல்வராஜை தொடர்பு கொண்டு பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்ததற்காக ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் செல்வராஜன் புகார் செய்தார். இதையடுத்து, செல்வராஜனிடம் லஞ்ச பணத்தை வாங்கும் போது எஸ்.ஐ., கலைச்செல்வி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், எஸ்.ஐ கலைச்செல்விக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post புகார் கொடுக்க வந்தவரிடம் லஞ்சம் பெண் எஸ்.ஐ.க்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.