பீமாசங்கர் ஜோதிர்லிங்கம்

1 week ago 3

பீமா சங்கர் ஜோதிர்லிங்கம் ஆறாவது ஜோதிர்லிங்கம் ஆகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், அகமது நகரிலிருந்து 166 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளது இந்த பீமாநதி சிவபெருமானின் வியர்வை துளியில் இருந்து உற்பத்தியாவதாகச் சொல்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் இந்த லிங்கத்தை தியானம் செய்தாலும் வழிபட்டாலும் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.

பிரியதருமன் பூஜித்த லிங்கம்

இந்தத் தலபுராண கதையும் ராமாயணத்தோடு தொடர்பு செய்யப்பட்டுள்ளது. ராவணன் தம்பி கும்பகர்ணன். மிகச் சிறந்த வீரன். அவன் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானால் வதம் செய்யப்பட்டான். இதை அறிந்த அவனுடைய மகன் பீமன் தன்னுடைய தந்தையைக் கொன்ற மகாவிஷ்ணுவை பழிவாங்க நினைத்து தவம் செய்து பிரம்மாவிடம் மிகப் பெரிய வரங்களை வாங்குகின்றான். இந்த வர பலத்தால் உலக மக்களையும் முனிவர்களையும் தேவர்களையும் கொடுமைப்படுத்துகின்றான்.

காமரூப நாட்டு அரசனும், சிவபக்தனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்துவந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர். கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக் கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான்.

அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன் மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார். இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார். இதனையடுத்து பிரியதருமன், தான் பூஜித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார். அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்தர்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இன்னொரு கதையும் உண்டு. திரேதா யுகத்தில் அழிக்க முடியாத வரபலத்தைப் பெற்ற திரிபுராசூரனை அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் பார்வதி தேவியின் துணைகொண்டு கார்த்திகை பௌர்ணமி என்று அழைக்கப்படும் திருப்புராரி பௌர்ணமியில் அழித்தார்.

கோயில் அமைப்பு

இந்தப் பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியில் இருப்பதால் வன விலங்கு சரணாலயமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயமானது நாகரா கட்டிடக்கலை பாணியில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மராட்டிய மன்னரான சிவாஜி இந்தக் கோயில் திருப்பணியில் மிகச் சிறந்த சேவை செய்திருக்கின்றார் போர்ச்சுகீசியர்களை வென்ற பிறகு பாஜிராவ் தேஷ்வாவின் சகோதரர் சின்னஜி அப்பா என்பவர் போர்ச்சுகீசிய மணியை காணிக்கையாகத் தந்துள்ளார்.

பூஜைகள்

ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே விசேஷமான பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோலவே பிரதோஷம் இங்கே மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது மாத சிவராத்திரியோடு வருட சிவராத்திரியும் இங்கே சிறப்பாக அனுசரிக்கப் படுகின்றது. அதேபோலவே, ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும் இங்கே பக்தர்கள் திரளாக வந்து சிவ பெருமானை தரிசிக்கின்றனர். இங்குள்ள அம்மனுக்கு கமலாஜா மாதா என்று பெயர் மோட்சகுண்ட தீர்த்தம் உள்ளது. சர்வ தீர்த்தம் குணசாரணை தீர்த்தம் பீமாநதி முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தலத்தில் இன்னொரு விசேஷம் கருவறைக்கு முன் நந்திக்கு பதிலாக ஆமை உள்ளது. மலைச்சாரலில் அமைந்துள்ள அழகான கோயில். கோயிலுக்கு செல்லும் வழி மேலே இருந்து கீழாக பள்ளத்தாக்கு நோக்கி செல்லுகின்றது. கீழே இறங்குவதற்கு நல்ல படிக்கட்டுகள் உள்ளன. மூலஸ்தானத்தில் சிவலிங்க பூமி மட்டத்திற்கு கீழே உள்ளது.

கருங்கல் சிற்ப வேலைப் பாடுகளோடு அமைக்கப்பட்ட கோயில் இந்த ஆலய கோபுர கலசத்தை அவசியம் தரிசிக்க வேண்டும் இங்கே பல பரிவார தெய்வங்களையும் தரிசிக்கலாம். கருவறையின் சுவரில் பார்வதி தேவியின் உருவம் மாடத்தில் அமைக்கப்பட்டுள்ளது சந்நதியை அடுத்து சபாமண்டபத்திற்கு அருகில் சனிபகவானின் சந்நதி தனியாக உள்ளது. காக்கை வாகனத்தின் மீது அமர்ந்து சனி பகவான் அருள் பாலிக்கிறார். அருகில் பீமா நதியின் கிளை நதியான சந்திரபாகா நதி ஓடுகின்றது அதில் நீராடி இறைவனை வழிபட வேண்டும். மோட்ச குண்டத்தில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு. சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யலாம் பூக்களாலும் வில்வத்தாலும் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

கோயிலுக்கு அருகில் கல்மஜா சந்நதி உள்ளது. இந்த தெய்வம் பழங்குடியினரின் தெய்வம். கோயிலுக்கு அருகில் அம்பா மற்றும் அம்பிகா குகைகள் பௌத்த பாரம்பரியத்துடன் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் ருஷி குண்ட தீர்த்தத்தை ஒட்டி மோட்ச குண்ட தீர்த்தம் உள்ளது. பீமசங்கரில் தத்தாமந்திர், கமலாஜமாதா மந்திர், ராமமந்திர் முதலிய கோயில்கள் உள்ளன.

திறக்கும் நேரம்

காலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை. காலை 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, மதியம் 1:00 மணிக்கு பூஜை, மாலை 7:30 மணிக்கு ஆரத்தி. கோயில் மண்டபங்களில் பண்டிதர்களை ஆலோசித்து சிறப்பு பூஜை செய்யலாம் கோயில் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டால் பக்தர்களுக்கு தங்கும் வசதியும், உணவு வசதியும் செய்து தருகின்றனர். அருகிலுள்ள தர்மசாலாவிலும் தங்கலாம். கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன.

எப்படிச் சென்றடைவது?

அருகிலுள்ள ரயில் நிலையம் புனே ரயில் நிலையம். புனேவிலிருந்து பீமா சங்கருக்கு பேருந்துகள் அல்லது டாக்சிகள் மூலம் செல்லலாம். பீமாசங்கர் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. புனே, மும்பை மற்றும் நாசிக் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பீமாசங்கருக்கு அரசு போக்குவரத்து பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. இந்த பயணத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டே செல்லலாம்.

The post பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article