விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் 19 வயதுக்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, குழந்தைத் திருமணங்களின எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 150 ஆக உயர்ந்துள்ளது.
பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம் குழந்தை திருமணமாகக் கருதப்படும். சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களுக்கு உரிய இடம் அளிக்காதது, வரதட்சணை, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்சினைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை, போதிய கல்வி அறிவின்மை, வறுமை, பாலியல்ரீதியான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமை, குடும்பத்தில் பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவது, பாலின விகிதம் சமமில்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.