சிவகங்கை: ஆதார் புதுப்பிப்பு, பிழைத் திருத்தத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால் பணம், கால விரயத்தோடு, மக்களும் அலைக்கழிப்பட்டு வருகின்றனர். இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு பெறுவது உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. தேசிய வங்கிகள், அஞ்சலகங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.
சில இடங்களில் ஆதார் ஆணையத்திடம் அனுமதி பெற்ற தனியார் மையங்களும் இயங்குகின்றன. இங்கு புதிதாக ஆதார் எடுப்பது, புகைப்படம் மாற்றுவது, விரல் ரேகை-கருவிழி பதிவு மற்றும் முகவரி மாற்றம், பெயர், பிறந்த தேதி போன்ற திருத்தங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.