ஊட்டி, மே 10: பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ் போன்றவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த காய்கறிகளுக்கு எப்போதும் ஓரளவு விலை கிடைக்கும். சில சமயங்களில் அதிகபட்ச விலை கிடைக்கும்.
இது போன்ற சமயங்களில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பீன்ஸ்களுக்கு எப்போதும் அதிக விலை கிடைக்கும். கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பெள்ளி மற்றும் புஷ் பீன்ஸ் போன்றவைகளுக்கு அதிக விலை கிடைத்து வருகிறது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.100 வரையில் விலை கிடைத்து வருகிறது.
இதனால், பீன்ஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைங்கிழங்கு விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ஒன்று ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிக விலை கிடைக்கும் நிலையில், அறுவடையிலும் விவசாயிகள் தற்போது மும்முரம் காட்டி வருகின்றனர்.
The post பீன்ஸ், உருளைக்கிழங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.