சென்னை, பிப்.21: சென்னை பெருநகர காவல் எல்லையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மெரினா போலீசார் நேற்று நள்ளிரவில் மெரினா கடற்கரையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடற்கரை அருகே வெகு நேரமாக ஜோடி ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்து இருந்தது.
இதை கவனித்த ரோந்து காவலர் ராஜ்குமார், அருகில் சென்று, வெகு நேரமாக அமர்ந்து இருக்கிறீர்கள்… நீங்கள் கணவன் மனைவியா அல்லது லவ்வரா என கேட்டுள்ளார். அதற்கு ஆண் நண்பருடன் அமர்ந்து இருந்த இளம்பெண் கோபமடைந்து, ‘எங்களை பார்த்து நீங்கள் எப்படி கணவன்-மனைவியா என கேட்பிங்க. இப்படி கேட்பதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது, என்றார். அதற்கு காவலர், நள்ளிரவு நேரத்தில் இப்படி தனியாக அமர்ந்து இருந்ததால் பாதுகாப்புக்காக கேட்டேன், என்றார்.
ஆனால் அந்த இளம்பெண், ‘ஒரு பெண், ஒரு ஆணுடன் தனியாக அமர்ந்து இருந்தால் கணவன் – மனைவியா, லவ்வரா என்ற கேட்பது அநாகரிகமான விஷயம். கணவன்-மனைவி மட்டும்தான் கடற்கரையில் உட்கார வேண்டும் என்ற அவசியம் கிடையாது. லவ்வராக இருக்கனும் என்ற அவசியமும் கிடையாது,’ என்ற வாக்குவாதம் செய்தார். அதற்கு ரோந்து காவலர், ‘இருட்டில் தனியாக இருக்க கூடாது, என்று கூறுகிறார். அதற்கு இளம்பெண், ‘இங்கு இருட்டாகவும் இல்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்க தவறாக நடந்ததை நீங்க பார்த்தீங்களா,’ என இளம்பெண் கேட்கிறார்.
அதற்கு ரோந்து காவலர், ‘நள்ளிரவில் தனியாக, இருட்டான பகுதியில் இருந்ததால் கணவன் மனைவியா என கேட்டேன் மேடம்,’ என்று கூறுகிறார். இந்த வாக்குவாதத்தின் போது, காவலர் மற்றும் இளம்பெண் தங்களது செல்போனில் மாறி மாறி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரவு பகலாக போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இளம்பெண் ஒருவர், பணியில் இருந்த காவலரை அநாகரீகமாக பேசி அவமானப்படுத்தும் இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது செயலுக்கு சிலர் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறனர்.
The post பீச்சில் ஜோடியாக இருந்தால் கணவன் மனைவியா, லவ்வரா என கேட்பீங்களா… மெரினாவில் ரோந்து காவலரிடம் இளம்பெண் கடும் வாக்குவாதம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.