பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அமல்படுத்தி உள்ள மதுவிலக்கால் ஏழைகளுக்கு சிரமம்; அதிகாரிகளுக்கு ஆதாயம்: பாட்னா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

1 hour ago 1

பாட்னா: பீகார் மாநில அரசு அமல்படுத்தி உள்ள மதுவிலக்கு சட்டத்தால் ஏழைகளுக்கு பிரச்னை அதிகரித்துள்ளது; அதிகாரிகள் ஆதாயமடைந்து வருகின்றனர் என்று பாட்னா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  நாட்டிலேயே குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் தான் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. ஆனால் அங்கும் கள்ள மார்க்கெட்டில் மது பானங்கள் சப்ளை செய்யப்படுகின்றன. சில நேரங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியாகும் மக்களும் உள்ளனர். குறிப்பாக பீகாரில் மதுபான தடை இருந்தபோதிலும், கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மதுவிலக்கு சட்டம் என்பது ஏழைகளுக்கு பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டில் மாநில அரசு மதுவை தடை செய்தபோது, அதன் பின்னணியில் ஒரு சரியான நோக்கம் இருந்தது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு முயற்சித்தது. ஆனால் இப்போது மதுவிலக்கு என்பது மிக மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது. மாநில அரசு இப்போது என்ன செய்யப் போகிறது?’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், ‘மதுவிலக்கு சட்டம் மதுபானம் மற்றும் பிற சட்டவிரோத பொருட்களின் கடத்தலை ஊக்குவிக்கிறது. இதனால் ஏழை மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக மாநில அரசு மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியது. ஆனால் இந்த சட்டம் அதன் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை. காவல்துறை, கலால் வரி, வணிக வரி மற்றும் போக்குவரத்துத் துறைகளின் அதிகாரிகள் இந்தச் சட்டத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதுபானக் கடத்தலில் ஈடுபடும் மாபியாக்கள் மீது குறைவான வழக்குகளை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.

மது அருந்துபவர்கள் அல்லது போலி மது அருந்திய பிறகு நோய்வாய்ப்பட்டவர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த மதுவிலக்கு சட்டம் காவல்துறையின் ஆயுதமாக மாறியுள்ளது. போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள். மதுவிலக்கு சட்டத்தைத் தவிர்ப்பதற்கான புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன’ என்று நீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்துள்ளது. பாட்னா உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ் கூறுகையில், ‘பீகாரின் சட்டவிரோத மதுபான வர்த்தகம் குறித்து உயர் நீதிமன்றம் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. பீகாரை உயிருள்ள பிணமாக நிதிஷ் குமார் மாற்றியுள்ளார்’ என்றார். மேலும் ஜான்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ‘மாநில அரசின் மதுவிலக்கு திட்டம் தோல்வியடைந்துள்ளது. பீகாரில் எங்கள் அரசு அமைந்தால், ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கு சட்டத்தை தூக்கி எறிவோம்’ என்றார்.

பீகாரில் 8 ஆண்டில் என்ன நடந்தது?
மதுவிலக்கு அமல்படுத்திய கடந்த 8 ஆண்டுகளில் 8 லட்சத்து 43 ஆயிரம் எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12 லட்சத்து 79 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கோடியே 46 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான 266 மரணங்களில், 156 மரணங்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்டவை. பீகாருக்கு வெளியே 234 மதுபான மாஃபியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு, போதைப்பொருள் பயன்பாடு மாநிலத்தில் அதிகரித்துள்ளது. ‘லான்செட்’ அறிக்கையின்படி, மதுவிலக்கு அமல்படுத்தியதால் வாராந்திர அடிப்படையில் 24 லட்சம் மது அருந்தும் வழக்குகள் குறைந்துள்ளன. குடும்ப வன்முறை வழக்குகளில் 21 லட்சம் குறைந்துள்ளது. பாலியல் வன்முறை 3.6 சதவீதமும் சிறுசிறு அடிதடி வழக்குகள் 4.6 சதவீதம் குறைந்துள்ளன. 80 சதவீதம் மக்கள் உடல் பருமனிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு மதுவிலக்கு உள்ளது?
கடந்த 1991ல் மணிப்பூரில் மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அச்சட்டம் பின்னர் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டது. கடந்த 1995ம் ஆண்டில் ஆந்திராவில் மதுபானம் தடை செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது. அரியானாவில் கடந்த 1996ல் மதுவிலக்கை கொண்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1998ல் திரும்பப் பெறப்பட்டது. தற்போது, பீகார், நாகாலாந்து, மிசோரம், குஜராத், லட்சத்தீவுகளில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. மாநில அரசை பாட்னா உயர் நீதிமன்றம் கண்டித்தது குறித்து மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பீகாரில் 13 கோடி மக்கள் உள்ளனர். ஆனால் 1.4 லட்சம் போலீசார் மட்டுமே உள்ளனர். அதனால் மாநிலத்தில் மதுபானச் சட்டத்தை அமல்படுத்துவது கடினமானது’ என்றார்.

The post பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அமல்படுத்தி உள்ள மதுவிலக்கால் ஏழைகளுக்கு சிரமம்; அதிகாரிகளுக்கு ஆதாயம்: பாட்னா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article