
கயா,
பீகாரின் கயா நகரில் அத்ரி என்ற பகுதிக்கு உட்பட்ட தெத்துவா கிராமத்தில், மத்திய மந்திரி ஜித்தன் மஞ்சியின் பேத்தியான சுஷ்மா தேவி, அவருடைய கணவர் ரமேஷ் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவருடைய சகோதரி பூனம் குமாரியும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, தேவியின் கணவர் குடும்ப தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் தேவி பலியானார்.
இதுபற்றி பூனம் நிருபர்களிடம் கூறும்போது, மதியம் 12 மணியளவில் வேலை முடிந்து ரமேஷ் வீடு திரும்பினார். அப்போது அவர், மனைவி தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், தகராறு முற்றியதில் நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து தேவியை நோக்கி சுட்டு விட்டு தப்பிவிட்டார் என கூறியுள்ளார்.
சம்பவம் நடந்தபோது தேவியின் குழந்தைகள் மற்றும் பூனம் மற்றொரு அறையில் இருந்தனர். அவர்கள் சத்தம் கேட்டு, உடனடியாக ஓடி சென்றனர். அறையில் தேவி குண்டு காயத்துடன் கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
தொடர்ந்து பூனம் கூறும்போது, ரமேஷ் என்னுடைய சகோதரியை கொலை செய்து விட்டார். அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அவரை தூக்கில் போட வேண்டும் என கூறினார். பீகார் மகாதலித் விகாஸ் என்ற இயக்கத்தின் கீழ், தேவி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த ரமேஷ், மனைவியை சுட்டு கொன்று விட்டு தப்பியோடி விட்டார். இதுபற்றி சிறப்பு படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். சுஷ்மாவும், ரமேசும் வெவ்வேறு சமூகத்தினர் என்றும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ஜித்தன் மஞ்சி உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் மக்களவை எம்.பி.யாக இருப்பதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மந்திரியாகவும் இருந்து வருகிறார். இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதசார்பற்ற) கட்சியின் நிறுவனரான அவர், பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளார்.