
சென்னை,
தமிழ்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. இதுபோல அமைச்சரவையிலும் இந்து சமய அறநிலையத்துறை ஒரு தனி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பக்தி பழமான சேகர்பாபு இருக்கிறார். எப்போதும் காவி அல்லது பச்சை வேட்டியுடன் நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருக்கும் அவரை திராவிட ஆன்மிகர் என்றே அனைவரும் அழைக்கிறார்கள். அத்தகைய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 46,257 கோவில்கள் இருக்கின்றன. கடந்த 7-5-21 முதல் 11-4-25 வரையில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை 2,805 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மேலும் கோவில்களில் 10,373 திருப்பணிகள் ரூ.1319.16 கோடி செலவில் நடந்து வருகிறது.
இப்போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கோவில்களில் திருப்பணி செய்ய நிறைய உபயதாரர்கள் அல்லது நன்கொடையாளர்கள் முன்வருகிறார்கள். கோவில்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை பணமாக மட்டுமல்லாமல் தங்க நகைகளாகவும், வெள்ளியாகவும் போடுவது வழக்கம். சிலர் தங்கத்தை நேர்ச்சையாகவும் கோவில்களில் காணிக்கையாக போடுவது உண்டு. இந்த நகைகளெல்லாம் சாமிக்கு அணிவித்தது போக மீதி பெட்டகங்களிலேயே பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருந்தன. அதனால் கோவில்களுக்கு எந்த பயனும் இல்லாமல் இருந்தது.
இந்த நகைகள் மூலம் கோவில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் கடந்த 2021-2022-ம் ஆண்டு நடந்த இந்து சமய மானியக்கோரிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று பொன் இனங்களில் கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி கோவில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 21 கோவில்களில் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தில் கோவிலுக்கு பயன்பாடற்ற தங்க இனங்களை உருக்கி கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி சுத்த தங்கம் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் அந்தந்த கோவில்களின் பெயரால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும், அந்த 21 கோவில்களுக்கும் ரூ.17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் வட்டித்தொகையாக கிடைக்கும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரங்களை அந்த கோவில்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது. இந்த கோவில்களில் இனி பக்தர்கள் காணிக்கையாக போட்ட தங்க நகைகள் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் ரூ.17 கோடியே 81 லட்சம் மூலம் பல திருப்பணிகள் பக்தர்களின் வசதிக்காக கிடைக்கும். மேலும் இந்த தங்க நகைகளை காணிக்கையாக போட்ட பக்தர்களுக்கும் தங்களின் காணிக்கை திருப்பணிகளுக்கு ஆண்டுதோறும் உதவும் என்ற மகிழ்ச்சியும் கிடைக்கும். இந்த 21 கோவில்கள் மட்டுமல்லாமல் அனைத்து கோவில்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.