
மும்பை,
மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார். இதனை வரவேற்றுள்ள மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், தேர்தல் ஆதாயத்திற்காக அதை அரசியலாக்குவதாக பா.ஜ.க.வை எச்சரித்தார்
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "பயங்கரவாதி தஹாவூர் ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் தேர்தல் நேரத்தில் அவர் தூக்கிலிடப்படுவார். ராணாவை இந்தியாவுக்கு கொண்டுவர 16 வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கியதாகும். எனவே ராணாவை இந்தியா கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி மார்தட்டிக்கொள்ள முடியாது" என்று கூறினார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் விசாரணைக்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு புனே எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.