டெல்லி : ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகாரின் மதுபானி கலையை போற்றும் வகையில் சிறப்பு சேலையை அணிந்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு பத்ம ஸ்ரீவிருது வென்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் துலாரி தேவி இந்த சேலையை பட்ஜெட் தினத்தில் உடுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கியிருந்தார். பீகார் மாநிலம் மிதிலா பகுதியில் உள்ள மதுபானி மாவட்டத்தில் வரையப்படும் ஓவியம் மதுபானி அல்லது மிதிலா ஓவியம் என்று அழைக்கப்படுகிறது.
இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மதுபானி கலை, பழங்கால கலை வடிவமாகும்; இந்து கடவுள்கள், தெய்வங்கள், புராண காட்சிகள், ஓவியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த கலை வடிவம் நூற்றாண்டுகளுக்கு முன்பே வீடுகள், கோவில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவியின் திறமையை போற்றும் வகையிலும் அவரால் தயாரிக்கப்பட்ட புடவையை அணிந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பீகார் பாரம்பரிய உடையில் வந்த நிர்மலா சீதாராமன், அம்மாநிலத்திற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார். பீகாருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் இருப்பதை தனது சேலையிலேயே நிதி அமைச்சர் உணர்த்தியது குறிப்பிடத்தக்கது. அவர், பட்ஜெட் உரையை 1.15 மணி நேரம் வாசித்தார்.
The post பீகாருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் இருப்பதை தனது சேலையிலேயே உணர்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!! appeared first on Dinakaran.