இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பெற்றோர்களிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. விருப்பப்பட்ட பள்ளியில் இடம் கிடைக்கிறது. தேவையான நோட்டுகள், பேனாக்கள், புத்தகங்கள், எழுதுபொருட்கள் எல்லாம் உடனடியாகக் கிடைத்துவிடுகின்றன. பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு அழைத்து வருவதற்கு கார் அல்லது ஆட்டோ தயாராக இருக்கிறது. வீட்டில் கேட்பதற்கு ஏற்ப விதம்விதமாக சமைத்துக் கொடுப்பதற்கு சமையல்காரர்கள் இருக்கிறார்கள். விருப்பப்பட்ட விளையாட்டுப் பொருட்களும் உடனே கிடைக்கின்றன. ஆனால், குழந்தைகள் எவ்வளவு விரும்பினாலும் பெற்றோரிடமிருந்து கிடைக்காத ஒரு பொருள் இருக்கிறது. அது என்ன தெரியுமா? பெற்றோர்களின் பேரன்பு.
ஆம்! கேட்பதற்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பல வீடுகளில் இன்று அப்பா பரபரப்பான அதிகாரியாக இருக்கிறார். இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார். அதற்குள் குழந்தைகள் வீட்டுப் பாடங்கள் எல்லாம் முடித்துவிட்டு தூங்கிவிடுகிறார்கள். காலையில் குழந்தைகள் தூக்கத்தை விட்டு எழுவதற்கு முன்பாகவே திரும்பவும் வேலைக்கு புறப்பட்டுவிடுகிறார். இன்றைய பொருளாதாரச் சூழலைச் சமாளிக்கப் பெரும்பாலான குடும்பங்களில் அம்மாவும் வேலைக்குச் செல்பவராக இருக்கிறார். அவரும் ஆறு அல்லது ஏழு மணிக்கு வீட்டிற்கு வருகிறார். வீடு திரும்பிய பிறகும் அவர்களுக்கு அலைபேசியில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அல்லது சிஸ்டத்தில் உட்கார்ந்துவிடுகிறார்கள். அவர்களுடைய மகனும், மகளும் தனிஅறையில் அமர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லா வசதியும் பெற்றோர்களால் செய்து தரப்படுகிறது. நன்றாக அமர்ந்து படிக்கச் சூழல், நாற்காலிகள், மின்விளக்கு வசதிகள் எல்லாம் தரப்படுகின்றன. ஆனால், அவர்களோடு மனம் விட்டுப் பேசுவதற்கு பெற்றோர்களுக்கு நேரம்தான் இல்லை.
பருவத் தேர்வுகள் முடிந்து பிராக்ரஸ் ரிப்போர்ட் வரும்போது அதில் மட்டும் அம்மா கையெழுத்திட்டு அனுப்புகிறார். அதில் கையெழுத்து போடக் கூட அப்பாவுக்கு நேரமில்லை. ‘இதையெல்லாம் நீ பார்த்துக்கொள், என்னிடம் கொண்டு வராதே!’ என்று சொல்லிவிடுகிறார். பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தும்போது கூட வீட்டில் இருந்து உறவினர்களையோ அல்லது வேலைக்காரர்களையோ கார் டிரைவர்களையோ அனுப்புகிறார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. வேலையில் பரபரப்பாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் என்ன நடந்தது? என்று கேட்பதில்லை. நகர்ப்புறத்தில் தான் இப்படி நடக்கிறது. வேலை பார்க்கும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் குழந்தைகளுக்கு அன்பு அதிகமாகக் கிடைப்பதாக நாம் நினைக்கிறோம். அதுவும் இல்லை என்பது தான் இன்னும் அதிர்ச்சியானது. கிராமப்புறங்களிலும் கணவன் மனைவி இருவருமே கூலி வேலைக்கு செல்கிறார்கள். சித்தாள் வேலை, 100 நாள் வேலை, கல் உடைக்கும் வேலை, களை பறிக்கும் வேலை என்று செல்கிறார்கள். அவர்கள் கரையேறி வருவதற்கு மாலை 7 மணி ஆகிவிடுகிறது. அதற்குப் பிறகு அப்பா களைப்பாக படுத்து தூங்கிவிடுகிறார்.
அம்மா ஒருவேளை சமைத்து பத்து மணிக்கு உணவு தருகிறார். அந்த குழந்தைகள் எந்த வகுப்பு படிக்கிறார்கள்? என்பது கூட பல பெற்றோருக்கு தெரிவதில்லை. சில சமயம் ஏதோ ஒரு காரணத்துக்காக பள்ளி வேலை நேரத்தின்போது பள்ளிக்கு வந்து என் மகள் பிரியதர்ஷினியைக் கூப்பிடுங்கள் என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள். ஆனால், இங்கு மூன்று பிரியதர்ஷினி இருக்கிறார்கள். உங்கள் மகள் எந்த வகுப்பில் படிக்கிறாள்? என்று கேட்டால் அவர்களுக்குச் சொல்ல தெரிவதில்லை. அப்படித்தான் கிராமப்புறப் பெற்றோர்களின் நிலைமை இருக்கிறது.
பள்ளியில் நடந்த விஷயத்தை அம்மா அப்பாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு ஓடிவரும் குழந்தைகள், அதை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பு நம் கண்களால் காண முடியாதது…
பெற்றோர்கள் தினமும் தங்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும். இன்று பள்ளியில் என்ன நடந்தது? உங்கள் நண்பர்கள் எல்லோரும் வந்தார்களா? ஏதாவது விளையாட்டுச் சண்டை நடந்ததா? மதியம் உன் தோழி என்ன உணவு கொண்டு வந்தாள்? என்றெல்லாம் கேட்க வேண்டும். பிறகுதான் ஏதேனும் தேர்வு நடத்தினார்களா? எவ்வளவு மதிப்பெண் எடுத்தாய் என்று கேட்க வேண்டும். உனக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும்? என்று கேட்க வேண்டும். அதற்கு என்ன காரணம் என்றும் கேட்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளோடு குறைந்தபட்சம் மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம் செலவுசெய்யுங்கள். உங்கள் கைகளால் சமைத்த உணவை உங்கள் குழந்தைகளுக்குப் பரிமாறுங்கள். பெண் குழந்தை என்றால் மடியில் சாய்த்துக்கொண்டு அவர்களோடு கொஞ்ச நேரம் உறவாடுங்கள். மகனை அன்போடு அணைத்துக் கொள்ளுங்கள்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் தான் நல்ல மனநிலையில் வளர்கிறார்கள். மாறாக நீங்கள் எல்லா வசதியும் செய்துகொடுத்து விட்டு ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்தால் அவர்கள் மனநிலை மாறிப்போய் சைக்கோ மனநிலைக்குப் போய்விடுகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்!
அப்பா எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் கூட, வீட்டுக்கு வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட மாலை நேரத்தில் போன் செய்து நிச்சயமாக உரையாட முடியும். இப்போது வீடியோ கால் வசதிகள் வந்துவிட்டன. வீடியோ கால் மூலமாகப் பேச முடியும். கூகுள் மீட் போட்டு பேசமுடியும். இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் அம்மாவால் சமைக்க முடியாமல் வேலைக்காரர்தான் சமைக்கிறார்கள் என்றால் குறைந்தபட்சம் உணவை எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். அப்போது அவர்களிடம் சந்தோஷமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பெற்றோர்களிடம் கேட்டால் எப்போதும் ஒரு பதில் சொல்கிறார்கள் ‘‘எங்கள் குழந்தைகளுக்காகத் தானே ஓடி ஓடி உழைக்கிறோம். அவர்கள் நலனுக்காக தானே சம்பாதிக்கிறோம்’’ என்கிறார்கள். கிராமப்புறத்தில் வேலை செய்யும் பெற்றோர்கள் இதே பதிலை வேறு மாதிரி சொல்கிறார்கள் ‘‘நான்தான் கஷ்டப்படுகிறேன், நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்று தான் ஓடி ஓடி உழைக்கிறோம்’’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு உண்மை புரியவில்லை. நீங்கள் சம்பாதிப்பதில் தவறில்லை. அப்படிச் சம்பாதித்த பணம் உண்மையிலேயே உங்கள் குழந்தைகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களோடு சேர்ந்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
உங்கள் குழந்தைகள் எழுதிய நோட்டு புத்தகங்களை வாங்கிப் பாருங்கள். அவர்களுடைய புத்தகங்களை வாங்கி புரட்டிப் பாருங்கள். நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் பாருங்கள். அவர்கள் சில பாடங்களில் ‘வெரி குட்’ வாங்கி இருந்தால் நீங்களும் கூடுதலாக மறுபடியும் வெரி குட் சொல்லி வாழ்த்துங்கள்.
பள்ளிப் பருவம் உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை அன்போடு அரவணைக்க வேண்டும். இல்லையென்றால் எப்போது இந்த பள்ளி படிப்பு முடியும் என்று ஒருவிதமான தண்டனை மனநிலைக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர்களின் அன்பு கிடைக்காத குழந்தைகள் வெளியில் கிடைக்கிற அன்பை உண்மை என்று நம்பி சென்றுவிடுவார்கள்.
அறம் மீறிச் செயல்படுகிறபொழுது அவர்களை நீங்கள் திரும்பவும் வழிக்குக் கொண்டு வரமுடியாது.அன்பைப் பருகுகிற குழந்தைகள்தான் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளிடம் பேரன்பு காட்டுங்கள்! இல்லை இல்லை உங்களிடம் இருக்கும் பேரன்பை வெளிப்படுத்துங்கள்! இன்னும் படிப்போம்!
The post பிள்ளைகளிடம் பேரன்பு காட்டுங்கள்! appeared first on Dinakaran.