புதுடெல்லி: பாகிஸ்தானில் நடைபெறும் பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியது கிரிக்கெட் உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2025 பிப்ரவரியில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. பாதுகாப்பு காரணமாக இப்போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காது என்றும், பொது இடத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி, எல்லா போட்டிகளும் பாக்.கில்தான் நடக்கும் பிரச்னை இருந்தால் இந்தியா பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிசி) பிடிவாதமாக கூறிவருகிறது.
இதனால், இவ்விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திணறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் நாளை துவங்கவுள்ள பார்வையற்றோருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் (சிஏபிஐ) நேற்று வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தானில் நடக்கும் பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாட, பாதுகாப்பு காரணங்களால் இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
நமது அணிக்கு இது பின்னடைவுதான் என்றாலும், அரசின் கவலைகளுக்கு மதிப்பளிக்கிறோம். போட்டியில் பங்கேற்பதற்காக நம் வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று வந்தனர். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் முனைப்பில் அவர்கள் இருந்தனர். ஆனால், அரசின் வழிகாட்டுதலுக்கே முன்னுரிமை தரப்படும். பார்வையற்றோர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா – பாக் இடையிலான உறவு ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், பார்வையற்றோர் கிரிக்கெட்டில் இருந்து நம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
The post பிளைண்ட் டி20 உலக கோப்பை; பாக்.கில் நடக்கும் போட்டியில் இந்திய அணி அதிரடி வாபஸ்: அடுத்த சரவெடியால் பரபரப்பு appeared first on Dinakaran.