நன்றி குங்குமம் தோழி
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து என்ற திருக்குறள் வரிக்கு ஏற்ப பொருள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதுதான் ஈகை பண்பு. பொதுவாகவே சிறுவர்களுக்கிடையே நண்பர்களுடன் உணவினை பகிர்ந்து உண்ணவும், தங்களிடம் இருக்கும் பொருட்களை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கும். ஆனால் நட்பு வட்டாரத்தை தாண்டி அந்த பகிரும் பண்பினை ஆதரவின்றியும் தவிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்த வருகிறார்கள் பள்ளி மாணவர்கள்.
சென்னையை சேர்ந்த சஷ்வத், ஷியாம், சாய் சித்தார்த் மற்றும் தீக்ஷிதா ஆகியோர் ‘தி மன்த்லி பாக்ஸ் (The Monthly Box) எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் புத்தகங்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்களை தானமாக சேகரித்து, வறுமையில் தவிக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் கொடுத்து வருகின்றனர்.‘கிவ் பேக் டூ சொசைட்டி’ என்கிற கருத்துப்படிதான் இந்த அமைப்பை தொடங்கினோம். சமூகத்தில் நமது பங்களிப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அது பொருளாகவோ அல்லது சேவையாகவோ இருக்கலாம். நாங்க முதலில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த செயலில் தான் ஈடுபட்டு வந்தோம்.
பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள அசுத்தமான இடங்களை நண்பர்களுடன் இணைந்து சுத்தம் செய்ய முடிவு செய்தோம். வார இறுதி நாட்களில் நான், ஷியாம் மற்றும் சாய் சித்தார்த் மூவரும்தான் செய்தோம். எங்களின் இந்தப் பணி குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்து, அவர்கள் மேலும் ஊக்குவிக்க, எங்களுடன் மற்ற சில நண்பர்களும் பள்ளி மாணவர்களும் இணைந்தனர்’’ என்று புன்னகைத்த சஷ்வத்தை தொடர்ந்தார் ஷியாம்.
“முதலில் நாங்கள் அந்த இடத்தினை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, அங்கிருந்த ஒரு சிலர் எங்களை பார்த்து ‘ரொம்ப சின்னப் பசங்களா இருக்கீங்க, அங்கு முட்கள் நிறைய இருக்கும், சுத்தம் செய்வது எளிதல்ல’ என்றார்கள். நாங்க சிரித்துவிட்டு எங்க வேலையை தொடர்ந்தோம். ஆனால் அவர்கள் சொன்னதுபோல ஆரம்பத்தில் அந்த இடத்தை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. எங்களுடன் சேர்ந்து மற்றவர்களும் ஈடுபட்டதால், எங்களால் வார இறுதி நாட்களில் சுத்தம் செய்ய முடிந்தது. பள்ளிக்கு செல்லும் போது அந்த இடம் சுத்தமாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு.
இதனை தொடர்ந்து சமூகத்தில் உள்ள மக்களுக்கு குறிப்பாக எங்களை போன்ற சிறுவர்களால் என்ன கொடுக்க முடியும் என்பதை யோசித்தோம். அப்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு பொருட்களின் தேவை இருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. பாடப் புத்தகங்கள், ஆடைகளை அவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம். ஆனால் எங்கு, எப்படி ஆரம்பிப்பதுன்னு தெரியல. முதலில் எங்களின் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்களிடம் சேகரிப்புக்கான திட்டமிட்டோம்.
அதனை எளிதாக சேகரிக்கும் வகையில் ‘தி மன்த்லி பாக்ஸ்’ என்ற ஒரு பெட்டியை எங்ககுடியிருப்பு பகுதியில் வைத்தோம். முதலில் அவர்களிடம் இருக்கும் பயன்படாத புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உட்பட அந்தப் பெட்டியில் போடச் சொல்லி எங்க நண்பர்களிடம் கூறினோம். அதன் பிறகு அங்குள்ள குடியிருப்பினருக்கு வாட்ஸப் குழு இருக்கும். அதில் என் பெற்றோர்கள் மூலமாக இது குறித்து தெரியப்படுத்தினோம். எங்களின் பெட்டியில் ஒவ்வொரு நாளும் புத்தகங்கள் சேர்ந்தது’’ என்ற ஷியாமை தொடர்ந்த சாய் சித்தார்த்தான் இந்தப் பெட்டியினை வடிவமைத்துள்ளார்.
“பொருட்களை சேகரிக்க ஒரு பெட்டி வேண்டும். அதனால் என் பெற்றோரின் உதவியுடன் அதை அமைத்தேன். இதனை வழக்கமான பெட்டி போலில்லாமல் சிறிய வீடு போன்ற அமைப்பில் உருவாக்கினேன். அதில் புத்தகங்கள் சேர்வதைப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்’’ என்றவரை இடைமறித்தார் தீக்ஷிதா.“பெட்டியை வைத்த ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேர்ந்தது. ஒரு மாதம் முழுதும் சேரும் பொருட்களை ஆதரவற்ற இல்லங்களுக்கு தானமாக கொடுக்கதான் திட்டமிட்டிருந்தோம். காரணம், அங்குள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். நாங்க கொடுக்கும் புத்தகங்களை கொண்டு சிறிய அளவில் நூலகமாக அமைத்தால் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு மேலும் பயன்படும் என்று நினைத்தோம்’’ என்றார் தீக்ஷிதா.
‘‘நாங்க நால்வரும் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சஷ்வத், ஆபரேஷன் மேனேஜர், சாய் சித்தார்த் டிசைன் ஹெட், தீக்ஷிதா ஐடியேட்டர், நான் மார்க்கெட்டிங் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் ஷியாம். ‘‘புத்தகம் மட்டுமில்லாமல் பல்வேறு பொருட்களை சேகரிக்கும் எண்ணம் உள்ளது. காரணம், அதற்கான தேவையும் இருக்கிறது. மக்களின் தேவை என்ன என்று தேடுகிறோம். அதன்படி முதல் மாதம் புத்தகங்கள், அடுத்த மாதம் ஆடைகள் சேகரிப்பான பெட்டியினை வைத்திருக்கிறோம். எங்களின் அப்பார்ட்மென்ட் மட்டுமில்லாமல் பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வைத்து இதன் நோக்கம் குறித்தும் அவர்களுக்கு விவரிப்போம்.
மேலும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் பல்வேறு மக்களுக்கு உதவ முடியும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நிச்சயம் எங்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு உதவ முன்வருவார்கள் என்று நம்புகிறோம். எங்களுடன் இணைந்து செயல்படுபவர்களுக்கு நாங்க சான்றிதழும் வழங்கி வருகிறோம். புத்தகங்கள், ஆடைகள், கல்விக்கு தேவையான உபகரணங்களை தானமாக கொடுக்க விரும்புபவர்கள் www.themonthlybox.com என்ற இணையம் மூலமாக எங்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றார் ஷியாம்.
சஷ்வத், தீக்ஷிதாவின் அம்மா மதுமிதா
‘‘இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள். நாங்க சில காலம் வெளிநாட்டில்தான் இருந்தோம். அப்போதே எங்களிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன. இந்தியா திரும்பியதும் சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள எங்க கிராமத்திற்கு சென்றிருந்தபோது, பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களை அங்கிருக்கும் குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டார்கள். அதன் பிறகு மகள் தீக்ஷிதா அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் எங்களிடம் இருக்கும் புத்தகங்களை ஒரு இடத்தில் வைத்து சிறு நூலகம் அமைத்தாள். குழந்தைகளும் ஆர்வமாக புத்தகங்களை படிக்க முன்வந்தனர்.
இவர்கள் தொடங்கி இருக்கும் இந்த அமைப்பின் அந்த செயல்தான் முதல் விதை என்று நினைக்கிறேன். அவர்கள் வளர்ந்ததும் அவர்களின் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட பங்கு தானம் செய்ய வேண்டும் என்று நானும் என் கணவரும் அவர்களிடம் கூறி இருக்கிறோம். இந்த சமூகத்திற்கு தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அமைப்பைத் தொடங்கிய 2 மாதத்திலேயே பலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இவர்களின் மற்ற முயற்சிக்கும் பலன் கிடைக்க வேண்டும்’’ என்றார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post The Monthly Box… appeared first on Dinakaran.