பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கட்டண விவரம்

2 months ago 7

2024- 2025ம்‌ கல்வியாண்டிற்கான +2 பொதுத்‌தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ டிஎம்எல் கட்டணத்தை ஆன்‌லைன்‌ வழியாக செலுத்துதல்‌ தொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்துமாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணத் தொகையை பெற்று, ஆன்லைனில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். செய்முறை பாடங்கள் கொண்ட மாணவர்களுக்கு ரூ.225, செய்முறை பாடங்கள் இல்லாத மாணவர்களுக்கு ரூ.175 எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பிசி, பிசி-எம் பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. 11ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத் தொகையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20ஆம் தேதி முதல் செலுத்தலாம். ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை வடிவிலான மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய, அனைத்துப் பள்ளிகளும் ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரைத் தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கட்டண விவரம் appeared first on Dinakaran.

Read Entire Article