
சென்னை,
தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. தேர்வு முடிவுகள், மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளன.
முன்னதாக பள்ளிக்கல்வி வாழ்க்கையின் இறுதியான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியை, பள்ளி மாணவ, மாணவியர்கள் சக மாணவ, மாணவியர்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வர். குறிப்பாக, வண்ண கலர்களை பூசிக்கொண்டும், பேனா மை தெளித்து விளையாடியும் மகிழ்வர். சில நேரங்களில், மாணவர்கள் விதிமுறையை மீறிய செயல்களிலும் ஈடுபடுவர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையங்களில் இருந்து காவல் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து தேர்வு மையங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் கூடுதல் காவல் துறையின் பாதுகாப்பு போடப்பட்டது. வழக்கமாக 2 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் இன்று கூடுதலாக 5-க்கும் மேற்பட்டோர் காலை முதல் பள்ளி வளாகங்களில், தேர்வு மையங்களில் அரசுப் பள்ளிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளியின் கழிப்பறையில் திடீரென பட்டாசு வெடித்தது. இந்த சத்தத்தை கேட்ட உடன் போலீசார் வந்து பார்த்தனர். பள்ளியில் பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையிலும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் வைத்திருந்து பட்டாசை மாணவர்கள் வெடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூரில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்ததை மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.