
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த கல்லூரியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆனந்த் ரவி (வயது 40) பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீரவநல்லூரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
இவர் சம்பவத்தன்று நாகர்கோவிலில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று கூறி மாணவியை அழைத்து சென்று, அங்குள்ள அறையில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்த மாணவி இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் ஆனந்த் ரவியை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவர் மற்றும் பெண் ஒருவர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.