பிறந்தநாளில் அரங்கேறிய கொடூரம்... கேக் வெட்டி கொண்டாட அழைத்துச் சென்று வாலிபரை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்

5 hours ago 2

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர், புது நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சங்கர் (19 வயது). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். சங்கருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும்.

பிறந்தநாளை கேக் வெட்டி, மது விருந்துடன் கொண்டாட ஏற்பாடு செய்து இருப்பதாக கூறி சங்கரை அவரது நண்பர்கள் அழைத்தனர். அதன்படி நேற்று இரவு சங்கர், தனது நண்பர்கள் 10 பேருடன் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கருணாநிதி சாலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் கைலாசம் தெரு அருகில் உள்ள முட்புதரில் நண்பர்கள் அனைவரும் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது மது அருந்தி கொண்டிருந்த நண்பர்களில் சிலர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரை வெட்டினர். அதிர்ச்சி அடைந்த சங்கர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் விடாமல் ஓட ஓட விரட்டிச்சென்று சங்கரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தலை, முகம், கை மணிக்கட்டு ஆகிய பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சங்கர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார் சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக சங்கரின் நண்பர்கள், அவரை கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடலாம் என அழைத்துச் சென்று பின்னர் மதுபோதையில் இருந்த அவரை திட்டமிட்டு வெட்டிக் கொன்றது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article