![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/26/35840082-2k.webp)
சென்னை,
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இவர் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், 'பிரேமலு'போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 'பிரேமலு'போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். 'பிரேமலு' மாதிரி பெரிய கலெக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும்'என்றார்.