ரியோ டி ஜெனீரோ,
நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு இன்று காலை சென்று சேர்ந்துள்ளார். அவரை இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவருடைய வருகையை முன்னிட்டு அந்நாட்டின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதேபோன்று இந்திய பெண்கள் குஜராத் பாரம்பரிய முறையிலான ஆடைகளை அணிந்து, பாரம்பரிய தாண்டியா நடனம் ஆடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர், அவரை வரவேற்க திரண்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். சிறுவர், சிறுமிகளை வாழ்த்தி அவர்களுடன் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்து கொண்டார்.
அவரை வரவேற்கும் வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், இந்திய தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமரின் புகைப்படங்களை சுமந்தபடியும் காணப்பட்டனர். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்றும், நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த உச்சி மாநாட்டில், உறுப்பு நாடாக உள்ள இந்தியா சார்பில், பிரதமர் மோடியும் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த பயணம் பற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரை சென்றடைந்துள்ளேன். பல்வேறு உலக தலைவர்களுடன் ஆழ்ந்த ஆலோசனை மற்றும் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.