
ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இதில் இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 54 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரிட்டோரியஸ் சந்தித்த முதல் பந்திலேயே 'கோல்டன் டக்'ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் வான் டெர் டஸன் 16 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த பிரெவிஸ் - ரூபின் ஹெர்மன் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இதில் ஹெர்மன் நிதானமாக விளையாட பிரெவிஸ் அதிரடியில் பட்டையை கிளப்பினார். ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 17 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 41 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை எளிதாக்கிய நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஹெர்மன் 45 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து வந்த கார்பின் போஷ் தனது பங்குக்கு 15 பந்துகளில் 23 ரன்கள் அடிக்க தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. கார்பின் போஷ் 23 ரன்களுடனும், ஜார்ஜ் லிண்டே 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரிச்சர்ட் யங்காரவா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரெவிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.