நீலகிரியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: மக்கள் அச்சப்பட வேண்டாம் - கலெக்டர் தகவல்

4 hours ago 2

நிபா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒருவகை நோயாகும். கேரள மாநிலத்தில் தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பாதிப்புக்கு பாலக்காட்டை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு முன்பு மலப்புரத்தை சேர்ந்தவர் நிபா வைரசால் இறந்தார். இதனால் அங்கு நிபா வைரஸ் பாதிப்புக்கு பலி 2 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, திருச்சூர் என 6 மாவட்டங்களில் உச்சகட்ட மருத்துவ கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையான நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கேரளாவில் நிபா வைரஸ் பரவி உள்ளது. வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை மனிதர்கள் சாப்பிடுவதால், நிபா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இது மனிதர்களிடையே பரவக்கூடியது. தமிழக-கேரள எல்லையான நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிதிர்காடு, தாளூர், கீழ்நாடுகாணி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

மேலும் நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டால், சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. சோதனைச்சாவடிகளில் 3 குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வாகனங்களில் வருவோருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article