
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 21). இவர், பெங்களூரு சென்னசந்திராவில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நிஷாந்த் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணியளவில் பிரியாணி சாப்பிடுவதற்காக சென்றார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேலும் 3 பேர் சென்றனர். சிட்டி மார்க்கெட் அருகே உள்ள பி.ஜி.எஸ். மேம்பாலத்தில் வரும் போது நிஷாந்த் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிஷாந்த் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் சிதானந்த் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதிகாலையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிட்டி மார்க்கெட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.