பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்

9 hours ago 2

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பு குறித்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, துணை ஜனாதிபதியின் கருத்து அமைந்திருந்தது.

இதனால் நிலைகுலைந்துபோன முதல்-அமைச்சர் ஸ்டாலின், 'யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் அரசுகள் நடத்தப்பட வேண்டும்' என கூறியிருக்கிறார்.

இதைத்தான் துணை ஜனாதிபதியும் கூறியிருக்கிறார். ஸ்டாலின் தனது கருத்தை திரும்ப படித்துப் பார்க்க வேண்டும். "யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க கூடாது" என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்தும்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் சுப்ரீம் கோர்ட்டையும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பையும், உண்மையிலேயே மதிப்பவராக இருந்தால், அரசியல் சட்டத்தில் உள்ள, சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article