பிரான்ஸ் பெண் பலாத்காரம் எதிரொலி; திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டிகள் விவரம் சேகரிப்பு

1 day ago 2

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டினர், இங்குள்ள தனியார் தங்கும் விடுதிகள், ஹோம் ஸ்டே எனப்படும் வாடகை வீடுகள், ஆசிரமங்கள் போன்ற இடங்களில் வெளி நாட்டினர் தங்குகின்றனர். குறிப்பாக, கிரிவலப்பாதையில் அத்தியந்தல், ஆணாய்பிறந்தான் போன்ற ஒதுக்குப்புறமான பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்கள் வெளிநாட்டினர் விரும்பி தங்கும் இடமாக மாறியிருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலைக்கு ஆன்மிக சுற்றுலா பயணியாக வந்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது இளம் பெண்ணை, கடந்த 18ம் தேதி தியானம் செய்யலாம் என தீபமலைமீது அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.

எனவே, திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டிகள் (டூரிஸ்ட் கைடு) எனும் பெயரில் வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தினரை குறிவைக்கும் நபர்கள் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், அவர்களுடைய முழுமையான விபரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்து வைக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் முழுமையான விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். வெளிநாட்டினர் தங்கியிருக்கும் விபரங்களை, சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தங்கும் விடுதி மற்றும் வீட்டு உரிமையாளர்கள், ஆசிரம நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விசா காலம் முடிந்த பிறகும் அனுமதியின்றி வெளிநாட்டினர் யாராவது திருவண்ணாமலையில் தங்கியுள்ளனரா என்ற விபரங்களை தனிப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். அதோடு, வெளி நாட்டினர் தங்கும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மலைமீது செல்ல ெபாதுமக்களுக்கு அனுமதியில்லை. மலைப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெளிநாட்டினரை மலைமீது அழைத்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே, அதை தடுக்கவும், வனத்துறையுடன் இணைந்து போலீசார் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

The post பிரான்ஸ் பெண் பலாத்காரம் எதிரொலி; திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டிகள் விவரம் சேகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article