திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று முன்தினம் நடந்தது. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் 6ம் நாளான நேற்று காலையில் ஹனுமந்த வாகனத்திலும், மாலையில தங்க ரதத்திலும், இரவில் யானை வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
விழாவின் 7-ம் நாளான இன்று காலையில், அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, பத்ரி நாராயணராக எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலையப்ப சுவாமியின் பத்ரி நாராயண ரூபத்தை தரிசனம் செய்வதற்காக மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பலர் பகவானுக்கு ஆரத்தி காட்டி வழிபட்டனர்.
விழாவில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை செயல் அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வாகன சேவையில் பங்கேற்றனர்.