பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி வீதிஉலா

3 months ago 22

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'வேணுகோபாலசாமி' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன வீதிஉலா முன்னால் பக்தி பஜனை, கோலாட்டம் நடந்தது.

அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'காளிய மர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று காலை பல்லக்கு வாகன சேவையில் மலையப்ப சாமி மாய மோகினி சொரூப அலங்காரத்தில் எழுந்தருளினார். அத்துடன் தங்க வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளினார்.

பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து வெளி வந்த அமிர்தத்தை யாருக்கு பரிமாற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அமிர்தத்தைப்பருக அசுரர்கலுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை தடுக்க விரும்பிய திருமால் மோகினி அலங்காரம் எடுத்து அசுரர்களை திசைத்திருப்பி தேவர்களை அமிர்தம் பருக வழிவகுத்தார்.

திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருமாலாகிய உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலை குத்திட்டு, அதன் மீது இடது கையை நீட்டி வைத்துக்கொண்டு அமர்ந்தபடி, "மாய மோகினி சொருப" அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாய மோகினி சொரூப அலங்கார அருட் வீச்சு பக்தர்கள் மீது நேரடியாக விழாமல் இருக்க உற்சவரின் நேர் எதிரே ரசம் பூசப்பட்ட நிலை கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் சிவன், திருமால், மோகினி, மகாலட்சுமி மற்றும் மட்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம. ஸ்ரீகிருஷ்ண, ராமர், பரசுராம, கல்கி உள்ளிட்ட அவதாரத்தில் பக்தர்கள் வேடமிட்டு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்தனர். அமிர்தம் வேண்டி மந்தார மலையை மத்தாக வைத்து, வாசுகி என்னும் பாம்பை தேவர்களும், அசுரர்களும் பிடித்து, பாற்கடலை கடைந்த காட்சிகளை பக்தர்கள் செய்து காட்டினர். மாலை 6.30 மணியில் இருந்து 11.30 மணிவரை கருட சேவை நடக்கிறது.

Read Entire Article