டெல்லி : பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஊக்கமருந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத புகாரில் 4 ஆண்டுகள் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. ஊக்கமருந்து பரிசோதனைக்கு அவர் மாதிரிகளை வழங்காத குற்றச்சாட்டின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேல்முறையீட்டு மனுவில் தடை நீக்கப்பட்டது.
தடை உத்தரவை எதிர்த்து ஊக்கமருந்து எதிர்ப்பு மேல்முறையீட்டு குழுவை அவர் அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அரியானா மாநிலத்தை சேர்ந்த பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகிய இருவரும் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை! appeared first on Dinakaran.