பிரத்யேகமான வடிவமைப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் பேருந்து சேவை

5 hours ago 2

திருச்சி, மார்ச் 10: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கும் மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசானது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒவ்வொரு கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து அந்தந்த கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்கிட பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதே சமயம் மிகவும் ஆபத்தான, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தீவிரமான நோய்கள் பாதிப்பில் இருந்து நோயாளிகளை காப்பாற்றவும், அந்த நோயின் தாக்கம் மற்றும் அதன் வீரியம் குறித்த பல்வேறு விழிப்புணர்கள் ஏற்படுத்தப்பட்டாலும், இன்றும் பொதுமக்கள் மூடநம்பிக்கையால் அந்த நோய் குறித்து வௌியே சொல்லாமல் மறைத்து வரும் நிலை உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு செல்லாமல் தவிர்த்து வருவதால், அவரால் மற்றவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே அப்படிபட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து கண்டறிய நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக காசநோய் பாதிப்பு, தொழுநோய், எச்ஐவி, புற்றுநோய் போன்ற உயிரைக்கொல்லும் அளவிற்கு அபாயகரமான நோய்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சையை முன்னெடுக்க இந்த நடமாடும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த வாகனங்களில் நோய் பாதிப்புகள் குறித்து கண்டறியும் ஸ்கேனர்கள், ரத்த மாதிரி ஆய்வு கூடங்கள், அடிப்படை மருத்துவ வசதிகள் என பிரத்யேகமான வடிவமைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதேபோல் தமிழக அரசு சமீபத்தில் கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு மறுவாழ்வு வழங்குவதற்கான `விழுதுகள்’ என்ற நடமாடும் சுகாதார மையத்தை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மறுவாழ்வு கருவிகள் மற்றும் நோயறிதல் சோதனை உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு பேருந்து பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கம், அணுகல் மற்றும் வாய்ப்புகள்) கீழ் தொடங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டை மையமாக கொண்ட முன்னோடியாக, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்திற்கு என மொத்தம் 5 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் தென்காசி, கடலூர், தருமபுரி, சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு ஒரு பேருந்து வீதம் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் பிரிவுகளில் பிசியோதெரபி, ஆடியோமெட்ரி சோதனை (கேட்கும் திறன்) மற்றும் ஆப்டோமெட்ரி (கண் பார்வை) வழங்கும் மையங்கள் ஏற்கனவே முசிறி, மணப்பாறை, திருச்சி நகரம் மற்றும் லால்குடி ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளது.

இருப்பினும், தொலைதூர கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் மையத்தை அடைவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே திருச்சி மாவட்டத்திற்கு ஆரம்ப கட்டத்தில் ஊனமுற்றவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து அடிப்படை கேஜெட்களையும் கொண்ட விழுதுகள் பேருந்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நான்கு துணை மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட இந்த பேருந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு மறுவாழ்வை வழங்கவும், சுதந்திரமான வாழ்க்கையை வாழவும் தொலைதூரப் பகுதிகளில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்யும்படி திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்தில் ஹைட்ராலிக் லிப்ட் உள்ளது, சக்கர நாற்காலியுடன் பி.டபிள்யூ.டி வசதியாக புணர்வாழ்வு சேவைகளைப் பெற பேருந்தில் ஏறலாம். துணை மருத்துவர்களால் வழங்கப்படும் மூன்று முக்கிய சுகாதார சேவைகளுக்காக பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பேருந்தில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்களும் உள்ளன.

மேலும் நோயறிதல் சாதனங்களை இயக்க இந்த பஸ் டீசல் ஜெனரேட்டரால் இயக்கப்படுகிறது, துறையூர், தா.பேட்டை, முசிறி மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட 14 நிர்வாக தொகுதிகளிலும் உள்ள தொலைதூரப் பகுதிகள் மொபைல் ஒன் ஸ்டாப் மையத்தின் மூலம் பயனடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு துணை மருத்துவப் பணியாளர்களை கொண்ட இந்த பேருந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும், சுதந்திரமான வாழ்க்கையை வாழவும் தொலைதூரப் பகுதிகளில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்யும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

The post பிரத்யேகமான வடிவமைப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் பேருந்து சேவை appeared first on Dinakaran.

Read Entire Article