
சென்னை,
நடிகர் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு , மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.
மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு 'டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இப்படத்திற்கு பெரிய சிக்கல் வந்துள்ளது. அதன்படி, இப்பட டைட்டில் தன்னுடையது என்று நடிகரும் இயக்குனருமான தேஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'ஒரு வருடத்திற்கு முன்பே 'டியூட்' படத்தை அறிவித்து விட்டோம். மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களின் படத்திற்கு எங்கள் பெயரை வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மைத்ரி போன்ற ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்த விஷயத்தை ஏற்கனவே அவர்களிடம் தெரியப்படுத்திவிட்டேன். அவர்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்' என்றார்.
தேஜ் 'டியூட்' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.