
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான திலீப் கோஷ் (வயது 60), அதே கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினரான ரின்கு மஜும்தார் (வயது 51) என்பவரை கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடந்த இந்த திருமணத்திற்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு, ஈகோ பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். கொல்கத்தா நகரில் நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது, தங்களுடைய உறவை முறைப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், தன்னுடைய 60 வயதில் திலீப் கோஷ் திருமணம் செய்துள்ளார். இது அவருக்கு முதல் திருமணம் ஆகும்.
எனினும், ரின்குவுக்கு இது 2-வது திருமணம் ஆகும். அவருக்கு முன்பே திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார். திருமணம் பற்றி மனம் திறந்து பேசிய கோஷ், இந்த சிறந்த நாளில், என்னுடைய தாயார் மற்றும் உறவினர்கள் எங்களை வாழ்த்தினர். அன்னையின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டேன். அவருடைய ஆசையை பூர்த்தி செய்வதற்காக திருமணத்திற்கு சம்மதித்தேன் என்றார்.
இந்நிலையில், ரின்குவின் முதல் திருமணத்தில் பிறந்த மகனான ஸ்ரீஞ்செய் தாஸ்குப்தா, நியூ டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு வரை மகனுடன் ஒன்றாக வசித்து வந்த ரின்கு, திருமணத்திற்கு பின்னர், கோஷின் வீட்டுக்கு சென்று விட்டார். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரின்குவின் மகனுக்கு நேற்றிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீஞ்செய் உடன் இருந்த காதலி, ரின்குவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக மகனை பார்க்க சென்ற ரின்கு அவரை, சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
எனினும், இதில் சதி செயல் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. கணையத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு அதனால் அவர் உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.
ரின்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, அவருடைய மகன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்து வந்ததும், ரின்கு வீட்டில் இருந்து சென்றதும் அவனுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு உள்ளது என்றும் கூறினார். சரிவர சாப்பிடவும் இல்லை. மருந்துகளும் எடுத்து கொள்ளவில்லை என தெரிய வந்தது. அவன் ஒருபோதும் அதனை என்னிடம் கூறவில்லை.
ஆனால், அவன் கவலையில் இருந்து வந்திருக்கிறான் என ஒரு தாயாக என்னால் உணர முடிந்தது என கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், ஸ்ரீஞ்செய்யுடன் நேற்றிரவு 2 பேர் இருந்தனர். அவர்களில் அவரை, விரைவில் திருமணம் செய்ய இருந்த காதலியும் ஒருவர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி கோஷ் கூறும்போது, ஸ்ரீஞ்செய்யின் இழப்பால் வாடுகிறேன். இது துரதிர்ஷ்டம் வாய்ந்தது. அவன் இனிமையான பையன். இருவரும் நன்றாக பழகி வந்தோம் என வருத்தம் தெரிவித்து உள்ளார். திலீப்புக்கு மகன் இல்லாத நிலையில், சொந்த மகன் போன்று ஸ்ரீஞ்செய்யுடன் பழகி வந்த நிலையில், அவருடைய மரணம் தீலீப்பை வெகுவாக பாதித்துள்ளது.