
ராமநாதபுரம்,
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் சுமார் 3,500 போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டபம் முதல் ராமநாதசுவாமி திருக்கோவில் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் நீராடவும், சாமி தரிசனத்திற்கும் அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளர்.