புதுடெல்லி,
நடந்து முடிந்த அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 48 தொகுதிகளையும், காங்கிரஸ் 37 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் அரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்-மந்திரி வேட்பாளர் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், தற்போதைய முதல்-மந்திரி நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்-மந்திரியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நயாப் சிங் சைனி சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சைனி கூறியதாவது,
இந்த மகத்தான வெற்றியின் பெருமை, கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு பலனளிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கிய பிரதமர் மோடியையே சாரும். அவரது திட்டங்களால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்துள்ளனர். பிரதமரின் கொள்கைகள் மற்றும் அவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே இந்த வெற்றி. அரியானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரியானாவில் உள்ள கட்சி தொண்டர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் தொடர்பான அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரசுக்கு சாதகமாகவே இருந்தன. இது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற சூழலை உருவாக்க முயல்கிறார்கள் என்று 4 நாட்களுக்கு முன் சொன்னேன்.
நான் எனது கடமையை செய்துவிட்டேன். கட்சியின் உயர்மட்டக் குழுவும், எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். கட்சியின் உயர்மட்டக் குழுவின் அணை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.