
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதன் மூலம் பிரதமர் மோடி மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற நமது மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.