
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நிதிஆயோக் கூட்டத்தில், 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்-மந்திரிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
அதேபோன்று, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநில முதல்-மந்திரிகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வந்த நிதிஆயோக் கூட்டம் நிறைவடைந்தது. முன்னதாக, நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு அடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்தார். இதனைத்தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நிதி ஆயோக் கூட்டத்தின் போது, நமது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய முன்னுரிமைகளை விவரிக்கும் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தோம்:
* கோயம்புத்தூர் & மதுரை மாவட்டங்களில் மெட்ரோவுக்கான ஒப்புதல்
* சென்னை பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோவுக்கு மாற்றுதல்
* NH32 வை (செங்கல்பட்டு–திண்டிவனம்) 6/8 பாதையாக மேம்படுத்துதல்
* கோயம்புத்தூர் & மதுரை விமான நிலையங்களின் விரிவாக்கம்
* கோயம்புத்தூரில் ஏய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுதல்
* அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (SSA) கீழ் நிதி வெளியீடு
* SC/ST பட்டியலில் உள்ள சில சமூகங்களின் பெயரிடலில் மாற்றம் ('N'/'A' முதல் 'R' வரை)
* SC-க்கு மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களை SC பட்டியலில் சேர்த்தல்
* மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் கைதிகளை விடுவிப்பதை விரைவுபடுத்துதல்
பிரதமர் இந்த திட்டங்களை உரிய அவசரத்துடன், கூட்டுறவு கூட்டாட்சியின் உண்மையான உணர்வில் பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.