மதுரை: ராணுவ வீரர்கள் எங்க சண்டை போட்டாங்க?. பிரதமர் மோடிக்குதான் பாராட்டு என்று செல்லூர் ராஜூ பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை விளாங்குடியில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு இந்தியரும், பிரதமர், ஒன்றிய அமைச்சருக்கு நன்றி சொல்லணும்… வயதான அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோரை எல்லாம் வைத்து பிரதமர் மோடி அற்புத பணி செய்துள்ளார். ராணுவ வீரர்கள் நடவடிக்கையை வீடியோ மூலம் கண்விழித்து உன்னிப்பாக கவனித்துள்ளார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். இதற்கு நாமும் பெருமைப்பட வேண்டும்.
இதை விட்டுட்டு, ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க…? இல்லையே. தொழில்நுட்பம் அமைத்து, இந்த கருவிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்தது ஒன்றிய அரசு, பாரத பிரதமர். இதைக் கேட்டவர்கள் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா. எந்தெந்த ஆயுதம் வாங்கணும்? எதிரிகளை எப்படி தாக்கலாம்? என்பதை அவங்கதான் உன்னிப்பாக செஞ்சாங்க. முதல்ல பாராட்ட வேண்டியது அவங்களைத்தான். பாரதப் பிரதமரைத்தான்…’’ என்று தெரிவித்தார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்து வரும் தக்க பதிலடிக்கு இந்தியாவே பாராட்டி வரும் வேளையில், அவர்களை குறைத்து மதிப்பிட்டு, பிரதமர் மோடியை, செல்லூர் ராஜூ தூக்கி வைத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The post பிரதமர் மோடிக்குதான் பாராட்டு ராணுவ வீரர்கள் எங்க சண்டை போட்டாங்க? செல்லூர் ராஜூ சர்ச்சை appeared first on Dinakaran.