
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய பாஜக அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்வா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், தொடர்ந்து மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்விமுறை என்ற இலக்குடன் ஒன்றியத்தில் ஒற்றை ஆட்சி நடத்தி அதிகாரக் குவியலுடன், சர்வாதிகார பாசிச ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய அனைத்து அமைப்புகளையும் தனது கைப்பாவையாக மாற்றி செயல்படுகிறார். இவரது செயல்பாடுகளை தடுத்து நிறுத்த சுப்ரீம் கோர்ட்டாலும் இயலவில்லை.
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பை பாழாக்குகிற வகையில் நீட் நுழைவு தேர்வு திணிப்பு, புதிய கல்விக் கொள்கை பெயரில் மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு என்று கூறி தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு என தொடர்ந்து தமிழக விரோத திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களை மோடி அரசு உதாசீனப்படுத்தி வருகிறது. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை இனத்தவருக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், மதரீதியாக சொத்துக்களை பராமரிப்பதையும் சீர்குலைக்கிற வகையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தனது மிருகபல மெஜாரிட்டியால் நிறைவேற்றியிருக்கிறது. இது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட கொடூரமான அடக்குமுறையாகும். புதிய கல்விக் கொள்கையை திணித்து, மூன்று செயல் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
பல்வேறு நிலைகளில் தமிழக நலன்களுக்கு விரோதமாக மோடி அரசு செயல்படும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடிக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கண்டனக் குரல், தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.