
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக, அழகர் மலையில் இருந்து கள்ளழகர் இறங்கி வந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அழகரை தரிசனம் செய்வார்கள். அழகர் ஏன் சித்ரா பௌர்ணமியன்று மலையில் இருந்து இறங்கி வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா?
புராண தகவல்
அழகர் மலையில் உற்பத்தியாகும் நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற முனிவர் மகாவிஷ்ணுவை நோக்கி தியானித்து தவத்தில் இருந்தார். அந்த சமயத்தில் துர்வாச மகரிஷி தன் பரிவாரங்களுடன் அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக்கொண்டிருந்த சுதபஸ் முனிவர், துர்வாசரைக் கவனிக்காமல் இருந்து விட்டார்.
இதனால் கடும் கோபமடைந்த துர்வாசர், மண்டூகமாக (தவளையாக) பிறக்கும்படி சுதபஸ் முனிவரை சபித்துவிட்டார். உடனே தவளையாகிப் போனற சுதபஸ், சாபவிமோசனத்திற்கு வழிகேட்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற துர்வாசர், "விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை நதிக்கரை) மகாவிஷ்ணுவை தியானித்து தவம் செய்துகொண்டிரு. சித்ரா பௌணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாப விமோசனம் கொடுப்பார்" என்று கூறினார்.
அவர் கூறியபடி தவளை உருவத்தோடு வைகையாற்றங்கரையில் தவம் செய்தார் சுதபஸ். அவருக்கு சாப விமோசனம் கொடுக்கவே, பகவான் கள்ளழகராக மதுரைக்கு வந்து வைகையில் எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மண்டூகமாக சாபம் பெற்று, அழகரால் சாபவிமோசனம் பெற்ற சுதபஸ் முனிவர், மண்டூக முனிவர் என்ற பெயர் பெற்றார்.
மீனாட்சி திருமணம்
தன் தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கும்போது, அந்த வைபவத்தைப் பார்க்க அழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையில் இருந்து இறங்கி மதுரையை நோக்கி வருகிறார். ஆனால் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்ததால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் நீராடி புறப்பட்டுச் சென்றார் என்கிறது புராண கதை.
அழகர் மலையில் இருந்து இறங்கி மதுரை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர், பின்னர் வண்டியூர் சென்று தனது பக்தரான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்குகிறார். பின்னர் அழகர் மலைக்கு திரும்புகிறார். இந்த நிகழ்வுகள் 10 நாட்கள் பிரமாண்ட திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.