பிரதமர் மோடிக்காக காத்திருக்கிறது மணிப்பூர்: காங்கிரஸ் ‘அட்டாக்’

3 hours ago 4

புதுடெல்லி: பிரதமர் மோடிக்காக மணிப்பூர் காத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக தாக்கியுள்ளார். மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதுவரை செல்லாததற்காக பிரதமர் மோடியை காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் மோடியின் பயணத்துக்காக மணிப்பூர் இன்னும் காத்து கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு அவருக்கு நேரமும், ஆர்வமும், சக்தியும் இருக்கிறது. ஆனால் மணிப்பூரில் துயரத்தில் வாடும் மக்களை சந்திப்பது அவசியமானது என அவர் நினைக்கவில்லை. அங்கு செல்வதற்கு அவருக்கு நேரமும் இல்லை. மணிப்பூர் முதல்வர் உள்பட தனது சொந்த கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமின்றி எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். மணிப்பூரின் துயரம் 2023ம் ஆண்டு மே 3-ம் தேதி முதல் தணியாமல் தொடர்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடிக்காக காத்திருக்கிறது மணிப்பூர்: காங்கிரஸ் ‘அட்டாக்’ appeared first on Dinakaran.

Read Entire Article