பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: இன்று மாலை சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்

8 hours ago 2

* மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட
இந்தியா கூட்டணி முதல்வர்களையும் சந்திக்கிறார்

சென்னை: டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய பிரதமர் மோடியை முதல்வர் வலியுறுத்துவார். முன்னதாக, இன்று மாலை 4 மணிக்கு சோனியா காந்தியை அவரது இல்லத்துக்கு சென்று முதல்வர் சந்தித்து பேசுகிறார். மேலும், மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முதல்வர்களையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.

அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்த ஆண்டுக்கான (2025) கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 9.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு கடிதம் முறையாக ஒன்றிய அரசு சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக, இன்று காலை 9 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலையத்தின் கேட் எண் 6 பகுதிக்கு வந்தார். அங்கு முதல்வரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்து சால்வை, புத்தகங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் முருகானந்தம், செயலாளர் சண்முகம், தனி உதவியாளர் தினேஷ்குமார் மற்றும் 2 பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த விமானம் இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்தது. டெல்லி சென்ற முதல்வருக்கு, தமிழக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, முரசொலி ஆகியோர் விமானம் நிலையத்திற்கு வந்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் சென்றார்.
டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசுகிறார்.

அப்போது, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் மேலும் சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ேபச திட்டமிட்டுள்ளார். குறிப்பாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரையும் முதல்வர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர், நாளை காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக தர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி மற்றும் தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய பிரதமர் மோடியை முதல்வர் வலியுறுத்துவார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

The post பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: இன்று மாலை சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article