புதுடெல்லி,
நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை பகுதியில் இன்று நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருடைய முதல் இந்திய பயணம் இதுவாகும். அவரை ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர்.
இந்நிலையில், டெல்லியில் நடந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் கூட்டத்தின் முன் சுபியந்தோ பேசும்போது, இந்தியாவிற்கு வருகை தந்ததற்காக நான் பெருமை கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணி ஆகியவற்றில் இருந்து நான் நிறைய கற்று கொண்டேன்.
வறுமையை ஒழிப்பது, விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது மற்றும் சமூகத்தில் பலவீன நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது ஆகிய அவருடைய பணிகள் எங்களுக்கு உத்வேகம் ஏற்படுத்துகிறது என்றார்.
இதேபோன்று, வருகிற ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு வளமும், அமைதியும் மற்றும் சிறந்த விசயங்கள் வந்து சேரட்டும் என வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.