பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலில் சாமி தரிசனம்

4 hours ago 2

ஜெய்ப்பூர்,

பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவற்றில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் மற்றும் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதும் அடங்கும்.

இந்நிலையில், பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்துள்ளார். அவருடன் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மாவும் சென்றார். கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் வருகையால் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் கோவிலில் சிறப்பு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சமீபத்தில் இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்த கோவிலுக்கு அவர் செல்வது முதன்முறையாகும். ராஜஸ்தானின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்துடனான பிரதமர் மோடியின் வலுவான தொடர்பை இது எடுத்து காட்டுகிறது.

இதனை தொடர்ந்து, அவர் தேஷ்னோக் பகுதியில், மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையம் ஒன்றை தொடங்கி வைப்பதுடன், பிகானீர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். அவருடன் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் சென்றனர்.

இதனை தொடர்ந்து, சாலை வழியாக 8 கி.மீ. தொலைவு பயணம் செய்து பலானா கிராமத்திற்கு சென்றடைகிறார். அவர் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதனை காண 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இருக்கை வசதிகள் மற்றும் பெரிய பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதன்பின்னர், மதியம் 12.30 மணியளவில் ஹெலிகாப்டரில் நளன் விமான நிலையத்திற்கு திரும்புகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வார்.

Read Entire Article