
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.
பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது.
பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், ராமேசுவரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேடையில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் அளிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேடைக்கு கீழே அமர்ந்திருந்தார். ரதமர் அலுவலகத்தில் இருந்து கடைசி நேரத்தில் வந்த உத்தரவால் நயினார் நாகேந்திரனுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக புதிய தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்வு கட்சியினரிடையே சலசலப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.