நிலநடுக்கம், உள்நாட்டு போர்... மியான்மரை நெருங்கிய அடுத்த அடி

5 hours ago 2

பாங்காக்,

மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. பாலங்கள் இடிந்து விழுந்தன. அணை ஒன்றும் உடைந்தது. இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை உடனடியாக அரசு பிறப்பித்தது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சையளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவசரகால சிகிச்சை துறையும் தயாரான நிலையில் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

உள்நாட்டு போரால் மியான்மர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், தகவல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அந்நாட்டில், ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்றும் ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது. தவிரவும், இந்த நிலநடுக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பேரிடரால், பலர் வீடுகளை இழந்து நிர்கதியாக உள்ளனர். இதனால், திறந்த வெளியில் படுத்து உறங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

நேற்றிரவு திடீரென கனமழை பெய்தது. அதனுடன் பலத்த காற்றும் வீசியது. அடுத்த வாரத்தில் நாடு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று மாலை அறிவித்து உள்ளது.

இதனால், பலத்த காற்றுடன், இடி, மின்னல் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவற்றுடன் கூடிய எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிவிப்பு தெரிவித்தது.

ராணுவ ஆட்சியின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் ஜா மின் துன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, இதுவரை 3,564 பேர் பலியாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 5,012 பேர் காயமடைந்தனர். 210 பேர் காணாமல் போயுள்ளனர் என கூறியுள்ளார்.

நிலநடுக்கம் தொடர்ச்சியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொலைபேசி அல்லது மொபைல் போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சாலைகளும், பாலங்களும் சேதமடைந்தன. இதனால், சேத மதிப்பீட்டு பணியிலும் இடையூறு ஏற்பட்டு உள்ளது.

Read Entire Article