சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், வரும் பிப்.9-ம் தேதி தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.16) தொடங்கி வைத்தார். மேலும், பார்வையாளர்கள் மாடத்தில் அவரது மகன் இன்பநிதியுடன் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டு ரசித்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து மதுரையில் இருந்து விமானம் மூலம் உதயநிதி சென்னை வந்தடைந்தார்.