அது ஒரு காலை நேரம், கடற்கரையின் மணற்பரப்பில் ஒருவர் நடந்து கொண்டிருந்தார். கடல் அலைகள் வேகமாக கரைக்கு வரும்போது அந்த அலைகளோடு சேர்ந்து சில நட்சத்திர மீன்கள் கடற்கரையில் ஒதுங்கின. கடலை நோக்கி அலை உள்செல்லும்போது ஒரு சில மீன்களை கடலுக்குள் அலை இழுத்துச் சென்றன. ஆனால் நட்சத்திர மீன்களில் ஒரு சில கடலுக்குள் செல்ல இயலாமல் கரையில் ஒதுங்கி சூரிய ஒளியில் தவித்தன. உயிருக்கு போராடிய நட்சத்திர மீன்களை பார்த்து அந்த மீன்களில் சிலவற்றை எடுத்து கடல் நீருக்குள் விட்டார் அந்த நபர். மீண்டும் அலைகள் கரைக்கு வரும்போது எல்லாம் சில நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்க தொடங்கின. பொறுமையாக அந்த மீன்களை மீண்டும் மீண்டும் எடுத்து கடல் நீரில் விட்டார் அந்த மனிதர் இவரின் வினோத செயலை அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். கடலில் இருந்து நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் பெரிய அளவில் கரையில் ஒதுங்கிக்கொண்டிருக்கின்றன.அந்த நட்சத்திர மீன்கள் அனைத்திற்கும் உங்களால் உதவ முடியுமா? ஒரு சில நட்சத்திர மீன்களை மட்டும் காப்பாற்றுவதால் உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்டார். அவரை கவனித்த வழிப்போக்கர் தன்னை பின்தொடர்ந்தவர் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்தார். அவர் மேலும் இரண்டு, மூன்று அடி தூரம் முன்னோக்கிச் நடந்தார் திரும்பி சில நட்சத்திர மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பிய அந்த மனிதரின் சிந்தனை சற்று வித்தியாசமாக அமைந்தது. என்னால் ஒரு மீனின் உயிர் காக்கப்படும் என்றால் அது மகிழ்ச்சியான விஷயம் கடலில் உள்ள அத்தனை மீன்களின் உயிர்களையும் காக்க வேண்டும் என்றால் அது என்னால் முடியாது. ஆனால் கரையில் ஒதுங்கிய மீன்களில் ஓரிரு மீன்களை உயிருடன் காத்தது எனக்கு முழு மனதிருப்தியைத் தருகிறது என்று சொல்லிக்கொண்டே மீண்டும் நட்சத்திர மீன்களை எடுத்து கடலுக்குள் அனுப்பினார் அவர். இதனால் அவருக்கு மன திருப்தியும், மன மகிழ்ச்சியும் கிடைத்தது.
இந்த உலகில் அப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்கள் சிலரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களிடம் பேசினால் ஆச்சரியமான தகவல்கள் பல அவர்களிடம் இருந்து கிடைக்கின்றன. அவை இந்த சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும்.மனிதாபிமானமிக்க செயல்களாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்ட வியப்புக்குரியவர்தான் ஜூலியா.1997-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா பட்டர்ஃபிளை ஹில் என்ற 23 வயது இளம்பெண் ஒருவர், வட கலிபோர்னியாவில் உள்ள 200 அடி உயரம் கொண்ட ‘லூனா’ என்ற ரெட்வுட் மரத்தில் ஏறினார். பசிபிக் லம்பர் கம்பெனி என்ற மரம் வெட்டும் நிறுவனத்திடம் இருந்து அம்மரத்தை காப்பாற்றுவதே
அவரது நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் சில வாரங்கள் மட்டுமே அந்த மரத்தில் இருப்பதற்காக ஏறிய அவர், கடைசியாக அங்கிருந்து இறங்கும்போது மொத்தமாக 738 நாட்கள் கடந்திருந்தன.வட கலிபோர்னியாவில் உள்ள பாரம்பரிய ரெட்வுட் மரங்களை காப்பாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றில் ஜூலியாவும் ஓர் அங்கமா இருந்து வந்தார். அந்த மரங்களில் சில 1,000 வயதை கடந்தவை. சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் இந்த மரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரெட்வுட் மரங்களை வெட்டும் பசிபிக் லம்பர் கம்பெனியின் முயற்சியால் கவலைடைந்த ஹில், அது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்தார். இதனையடுத்து, அவர் தேர்வு செய்ததுதான் லூனா என்ற அந்த ரெட்வுட் மரம். இந்த மரமே இந்தச் சுற்றுச்சூழல் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமாக மாறிப் போனது.தரையில் இருந்து கிட்டத்தட்ட 200 அடி உயரத்தில் 6×8 அடி அகலம் கொண்ட ஒரு மேடையை அமைத்து அதில் தங்கியிருந்த ஹில், ஆக்ரோஷமான வானிலை, தனிமை மற்றும் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டார்.கடும் புயல்கள், இடைவிடாத குளிர் மற்றும் மரம் வெட்டும் ஊழியர்களின் தொந்தரவு ஆகியவற்றையும் அவர் சமாளித்தார். அந்த மேடைதான் அந்த 738 நாட்களும் அவருக்கு எல்லாமாகவும் இருந்தது. மரத்தில் இருந்த நாட்களில், ஹில் ரேடியோ நேர்காணல்கள் மற்றும் கடிதங்கள் வாயிலாக வெளி உலகத்துடன் தொடர்புகொண்டார்.அவரது இந்த துணிச்சல் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், சுற்றுச்சூழல் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அவரை மாற்றியது.இரண்டு ஆண்டுகால பேச்சுவார்த்தைக்கு பிறகு, 1999-ஆம் ஆண்டில் வெற்றிகரமான முறையில், ஹில் வைத்த கோரிக்கைகளுக்கு பணிந்தது பசிபிக் லம்பர் நிறுவனம்.
லூனா மரமும் அதை சுற்றியுள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். அதன்படி இப்போது வரை அந்த மரமும் அந்த நிலப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகின்றன.இந்த வெற்றிக்கு ஒரு மிகப் பெரிய விலையையும் ஹில் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதாவது, லூனா மரத்தை பாதுகாப்பதற்காக அந்த நிறுவனத்துக்கு 50,000 அமெரிக்க டாலர்களை திரட்டிக் கொடுத்தார்.
இந்தக் கசப்பான சமரசத்தை தாண்டி ஹில்லின் இந்த முயற்சி இன்றுவரை சுற்றுச்சூழல் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப் படுகிறது.லூனா ரெட்வுட் மரத்தில் தான் இருந்த நாட்களின்போது கிடைத்த அனுபவங்களை பற்றி ‘தி லெகசி ஆஃப் லூனா’ என்ற புத்தகத்தை ஹில் எழுதியிருக்கிறார். மேலும் எழுத்து, பேச்சுக்கள் வாயிலாக தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார் ஜூலியா ஹில். இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் நற்செயல்களால் மட்டுமே மனத்திருப்தியும்,மன மகிழ்ச்சியும் கூடிய வெற்றியும் கிடைக்கும் என்பதாகும். அத்தகைய நல்ல செயல்களை நாம் தொடர்ந்து செய்யும்போது நாள்தோறும் வெற்றிகளைக் காணலாம்.
The post உன்னதமான செயல்தான் உங்களை உயர்த்தும்! appeared first on Dinakaran.