பின் பக்கங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் பைக்குகளில் வேகமாக வலம் வரும் ‘புள்ளிங்கோஸ்’

2 hours ago 1

மதுரை: மதுரையில் சாலை பாதுகாப்பு வாரம், மாதத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையில் கூடுதல் போக்குவரத்து துணை கண்காணிப்பாளர் திருமலைக்குமார் முன்னிலையில் உதவி கமிஷனர்கள் செல்வின், இளமாறன் தலைமையில் நடத்தி வருகின்றனர். தலைகவசம் அணிதல், விதிமுறைகளை பின் பற்றுதல் உள்பட பல்ேவறு போக்குவரத்து விதிகளை நோட்டீஸ்சாக அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதைப்பற்றி கவலைபடாத சில புள்ளிங்கோக்கள் அவர்களது டூவீலர்களில் முன்பக்கம் மட்டும் நம்பர் பிளேட் பொருத்தியிக்கின்றனர். பின் பக்கங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளை கழற்றி விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் போலீசாரிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். போலீசாரை கடந்த பின்னர் தான் நம்பர் பிளேட் இல்லாததே தெரியவரும். சமூக விரோதிகள் புள்ளிங்கோ போர்வையில் நம்பர் பிளேட் பொருத்தாமல் பைக்குகளில் வந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். வழிபறி செய்த பின்னர் வாகனத்தில் நம்பரை கண்டறிய முடியாது. இதனால் குற்றவழக்குகளில் இருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். இவர்களை சாலை விழிப்புணர்வு மாதம் கொண்டாடும் நாட்களிலேயே பிடித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து போலீசார் கூறுகையில், பின் பக்கங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் பைக்குகளில் வலம் வருபவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டூவீலர் ஓட்டும் சிறுவர், சிறுமியர் குறித்து அவர்கள் பெற்றோரே அழைத்து தொடர்ந்து பல முறை எச்சரிக்கை செய்கிறோம். ஆனால் பெற்றோர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட பின்னரே உணர்கின்றனர். மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3ன் படி உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொதுஇடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது. பிரிவு 4ன் படி 18 வயதுக்குக் குறைவான எந்த ஒரு நபரும் பொதுஇடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 180ன் படி மேற்கண்ட சட்டப்பிரிவுகளுக்கு முரணாக உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத நபரை அல்லது 18 வயதுக்குக் குறைவான நபரை வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும். இக்குற்றத்திற்கு ரூ.1000 அபராதமாகவும் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கலாம். எனவே உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாதென எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள்/ வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு பைக் ஓட்டுவதில் ஆர்வம்
பள்ளி மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டு அருகில் டூவீலர் ஓட்டும் இவர்கள் பின்னர் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளுக்கு செல்வது என கூடுதல் தூரங்களுக்கு செல்ல வீட்டில் இருக்கும் பெற்றோர் பழக்குகின்றனர். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு டூவீலரில் செல்கின்றனர். பெற்றோர் மற்றும் வீடுகளில் உள்ள உறவினர்கள் சிறுவர், சிறுமிகளிடம் டூவீலர் வாகனங்களை கொடுப்பது குறித்து கவனம் செலுத்துவதில்லை. இதனால் பள்ளி நேரம் போக காலை, மாலை நேரங்களில் டூவீலரில் விபத்து குறித்த அச்சமின்றி அதிவேகத்துடன் பயணிக்கின்றனர். அதிவேகம், வாகனங்களை கையால்வதில் போதிய அனுபவமின்மையால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்குவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

எவ்வித கட்டுப்பாடும் இன்றி வளர்க்காதீர்கள்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புள்ளிங்கோக்கள் டூவீலர்களில் முன்பக்கம் மட்டும் நம்பர் பிளேட் பொருத்தியிக்கின்றனர். பின் பக்கங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளை கழற்றி விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் போலீசாரிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுவர், சிறுமிகளிடம் டூவீலர்களை கொடுப்பதற்கு முக்கிய காரணம் பெற்றோர் தான். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வளர்க்கின்றனர். போக்குவரத்து விதிகள் குறித்தும் பெற்றோர் கவலைப்படுவதில்லை. டூவீலர் ஓட்டி விபத்தில் சிக்கும் குழந்தைகளின் பாதிப்பிற்கு முழுக்காரணம் பெற்றோர்களே. அவர்கள் 18 வயதிற்கு மேல் தான் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறையை கடைப்பிடித்து குழந்தைகளிடம் வாகனத்தை கொடுக்க வேண்டும், அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறையை பின்பற்ற கற்று கொடுக்க வேண்டும், என்றனர்.

The post பின் பக்கங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் பைக்குகளில் வேகமாக வலம் வரும் ‘புள்ளிங்கோஸ்’ appeared first on Dinakaran.

Read Entire Article