சன் டிவி நெட்ஒர்க் சமூக பங்களிப்பு நிதியுடன் ₹5.94 கோடி செலவில் 9 துணை சுகாதார நிலையங்களுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

2 hours ago 1

ஆற்காடு: சன் டிவி நெட்ஒர்க் சமூக பங்களிப்பு நிதியுடன், ₹5.94 கோடி செலவில் 9 புதிய துணை சுகாதார நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூரில் ஆற்காடு மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் நமக்கு நாமே திட்டம் 2024-25ல் சன் டிவி நெட்வொர்க் நிறுவன சமூக பங்களிப்பு நிதி ₹1.96 கோடி மற்றும் அரசு நிதி ₹3.97 கோடி என மொத்தம் ₹5.94 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக் அமைத்தல் மற்றும் கூடுதலாக 9 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் சன் டிவி நெட்வொர்க் சமூக பங்களிப்பு நிதியுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்ட 14 துணை சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் பேவர் பிளாக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், ‘தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு முக்கிய தேவையான சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். மற்ற துறைகளிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார்’ என்றார்.

தொடர்ந்து 508 பயனாளிகளுக்கு ₹14.71கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட திமுக அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.வி.நந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் மதி நந்தகுமார், ஆற்காடு நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.வி.என் நாத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மாரி ராஜா நன்றி கூறினார்.

4 மாவட்டங்களில் 13 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக உள்ள இல்லம் தேடி மருத்துவத் திட்டத்தை சமீபத்தில் ஐநா சபை பாராட்டி விருது அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2.30 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு கட்டாயமாக புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டம் தீட்டப்பட்டு செயல்பட்டதில் 13 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு அதன் மூலம் 140 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், சிறு வயதினருக்கும் கூட இதய பாதிப்பு ஏற்படுவதால் உயிரிழப்பை தவிர்க்க இதயம் காக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தமாக 14,417 பேர் பயனடைந்துள்ளனர். இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 85 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post சன் டிவி நெட்ஒர்க் சமூக பங்களிப்பு நிதியுடன் ₹5.94 கோடி செலவில் 9 துணை சுகாதார நிலையங்களுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article