
புதுடெல்லி,
2026 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை 10-ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்துவதற்கான வரைவு விதிமுறைகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கல்வி மந்திரி தலைமையில் சமீபத்தில் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.
உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. இதன்படி தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வுகள், அதன் முடிவுகள் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டத் தேர்வுகள் பிப்ரவரி 17ந் தேதி முதல் மார்ச் 6ந் தேதி வரை நடத்தப்படும் என்றும், இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே 5ந் தேதி முதல் 20 ந் தேதி வரை நடத்தப்படும் என்றும், இரண்டு தேர்வுகளும் முழு பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் என்றும் செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரைவில், இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே மையங்கள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில் இதற்கான வரைவுக்கொள்கை மீது பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் வரும் மார்ச் 9ந் தேதி வரை கருத்துகளை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.