
சென்னை,
நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்திற்குப் பின் விடுதலை - 2 படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தன. தற்போது, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நித்யா மேனனுடன் குடும்பகதை ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். அட்லியின் ஏ பார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இரண்டாம் வாரத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'சீதக்காதி' ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தை தயாரித்துள்ளார் அட்லீ. இதனை அட்லீயுடன் இணைந்து முரத் கேடானியும் தயாரித்திருக்கிறார். இந்த நிகழ்வில் அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக அட்லீ மற்றும் முரத் கேடானி இணைந்து அறிவித்துள்ளார்கள். இப்படத்துக்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக அட்லீ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.